சிகிரியாவில் அனுமதியின்றி அபிவிருத்திப் பணிகள் : விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவு
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துளையிடல் மற்றும் கனரக உபகரணங்களைப் பொருத்திய நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத அபிவிருத்தி பணிகள்
ஆணைக்குழுவின் கள ஆய்வில், சிகிரியா குன்றின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை பொருட்களைக் கொண்டு செல்லும் கேபிள் கட்டமைப்பு அமைக்கப்பட்டதுடன், பாறையில் துளையிடப்பட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புராதன சுவர் ஓவியங்களைப் பாதுகாக்கும் பணிகளில் நவீன பூச்சு மற்றும் சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், புராதன கல்வெட்டுகள் அகற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உரிய அனுமதிகளும் நடைமுறைகளும் இன்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் நாட்டின் கலாசார மற்றும் சுற்றுச்சூழல் மரபுரிமை உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.