உக்ரைன் ரஷ்ய மோதல்! நுாற்றாண்டு காணாத அகதி நெருக்கடி - ஐ.நா எச்சரிக்கை (VIDEO)
உக்ரைனில் கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் 44 மில்லியன் மக்கள் உள்ளதாக உலக வங்கி கணிப்பிட்டுள்ளதுடன், மொத்த மக்கள் தொகையில் 02 வீதமானவர்கள் தற்போது அகதிகளாகியுள்ளனர் என ஐ.நா கூறியுள்ளது.
மக்கள் வெளியேறும் செயற்பாடுகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை என கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்த எண்ணிக்கை 04 மில்லியன் வரை செல்லலாம் எனவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்காக முகவர் நிறுவகம் கணித்துள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்களும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி, அயல் நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.
உக்ரைனில் துப்பாக்கிகள், அமைதியடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் மோதல்கள் காரணமாக ஐ.நா கட்டமைப்பே கரிசனைக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனத்திற்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மாதம் 24 ஆம் திகதி ரஷ்யாவின் தாக்குதல்கள் ஆரம்பித்தவுடன் முதல் நாளிலேயே 82 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியிருந்தனர்.
அதனை அடுத்த நாட்களில் நாளாந்த வெளியேற்றமானது ஒரு இலட்சத்தை தாண்டியதுடன், கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டு இலட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் காரணமாக 5.7 மில்லியன் மக்கள் வெளியேறியிருந்தனர்.
எனினும் சிரியாவில் இருந்து அகதிகளாக ஒரு மில்லியன் மக்கள் வெளியேறுவதற்கு
மூன்று மாதங்கள் சென்றிருந்த போதிலும் உக்ரைனில் இருந்து ஒரே வாரத்தில் ஒரு
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேறி, அயல் நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.