ரஷ்ய விமானப்படை விமானத்தை தாக்கி வீழ்த்திய உக்ரைன் ஏவுகணை: உற்சாகக்குரல் எழுப்பிய உக்ரைன் வீரர்கள்
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன.
உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிப் பதிவாகியுள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன.
தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட, அந்த விமானம் தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறி தரையில் விழுவதையும், அதைக் கண்ட உக்ரைன் வீரர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள காணொளியில் காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், கார்க்கிவ் நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமரா ஒன்றிலும், ரஷ்ய விமானம் ஒன்று இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்படும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கார்க்கிவ் பகுதி கவர்னரான ஆல்யெக் சினிகுபோவ், ரஷ்யப் போர் விமானம் கார்க்கிவ் விமான பாதுகாப்புப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
அத்துடன், கார்க்கிவ் நகரில் சுற்றிச் சுற்றி வந்து, தொடர்ந்து குண்டு
வீசிக்கொண்டிருந்த ஐந்து முதல் ஏழு ரஷ்ய விமானங்களில், இந்த விமானமும் ஒன்று
என அவர் தெரிவித்துள்ளார்.