யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி போராட்டம்(Photos)
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி சந்தியில் இன்று (14.09.2023) காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு சில தினங்களுக்குள் மதுபானசாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - எரிமலை
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் பாடசாலைகளுக்கு மிக அண்மையில் புதிதாக மதுபானசாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து ஐந்நூறு மீற்றர்களுக்கும் குறைவான தொலைவில் உடுப்பிட்டிச் சந்தியிலிருந்து நவிண்டில் நோக்கிய வீதியில் இமையாணன் மேற்கில், பிரதான வீதியிலேயே இந்த மதுபானசாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, இமையாணன் இ.த.க
பாடசாலையிலிருந்தும் நவிண்டில் தாமோதரா பாடசாலையிலிருந்தும் இம்மதுபானசாலை
மிகக் குறைந்த தூரத்திலிருப்பதும் மாணவர்கள் மத்தியில் மதுபானப் பாவனையை
ஊக்கப்படுத்திவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கடும் விசனம்
கரவெட்டி பிரதேச செயலக ஆளுகைப் பரப்பினுள், கரவெட்டி பிரதேச சபையினுள் உள்ளடங்கும் பகுதியில், பாடசாலைகளுக்கு மிக அருகில், குடிமனைகள் நிறைந்துள்ள பகுதியில் இம்மதுபானசாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |