அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிப் பட்டியலில் இருந்து இலங்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அமெரிக்காவிற்கு அதிகளவு ஏற்றுமதிகளை மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ஆடை தொழிலுக்கு சாதகமான சூழல்
இவை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு, குறிப்பாக ஆடைத் தொழிலுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கு போட்டியாக பொருட்களை அனுப்பும் நாடுகளில் குறிப்பாக ஆடை தொழில் போன்றவற்றுக்கு சில நாடுகளும் வரி விதித்துள்ளன.
இதன்போது அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையோ அல்லது அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையோ ஏதாவதொரு வகையில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது நமது மொத்த ஏற்றுமதியில் 23 அல்லது 24 சதவீதத்தை அமெரிக்காவிற்கு அனுப்புவதால் இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்
இலங்கையின் ஆடை தொழில்துறையை மேலும் விரிவுபடுத்துவதுடன், இலங்கையில் கிடைக்கும் ஆர்டர்களை தடையின்றி வழங்குவதற்குத் தேவையான சூழலை தயார்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை அதிகரிக்கும் திறன் எம்மிடம் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சில நாடுகளுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்துள்ள வர்த்தக உடன்படிக்கைகளில் தற்போதுள்ள வரி வரம்புகள் காரணமாக, உண்மையான வரிகள் இதை விட குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.