நவம்பர் 30 ஆசிரியர்கள் போராட்டம் உறுதி! அரசாங்கத்திற்கு ஜோசப் ஸ்டாலின் விடுத்த நேரடி எச்சரிக்கை
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் ஒருநாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதியென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும், இது தொடர்பில் கல்வி அமைச்சருடனும் பிரதமருடனும் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக சுபோதினி குழுவின் பரிந்துரைகளில் எஞ்சியுள்ள சம்பள உயர்வுக் கட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சம்பள அதிகரிப்பு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது எனத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், இது ஆசிரியர்களின் உரிமைகளுக்கான தொழிற்சங்கப் போராட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், அதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...