செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவன தலைமை நிர்வாகியுடன் ட்ரம்ப் சந்திப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அன்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையடவுள்ளார்.
இருவருக்கும் இடையே இடம்பெறும் முதலாவது இருதரப்புச் சந்திப்பான இது, அன்த்ரோபிக் நிறுவனத்திற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பல மாதங்களாக நிலவி வந்த பகிரங்க முரண்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறுகின்றது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியை வேகமாக முன்னெடுப்பது ஆபத்தானது என்ற கருத்துக்கள் நிலவியபோதிலும், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்ள அமெரிக்கா தனது AI துறையின் வேகத்தைக் குறைக்கக்கூடாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்
சீனாவுடனான போட்டியில் அமெரிக்கா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், புதிய கட்டுப்பாடுகள் சீனாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தங்களது தொழில்நுட்பத்தை முழுமையான தானியங்கி ஆயுதங்களுக்கோ அல்லது உள்நாட்டுப் பெருந்திரள் கண்காணிப்புகளுக்கோ பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததை அடுத்து, அன்த்ரோபிக் நிறுவனத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை 'விநியோகச் சங்கிலி அபாயம்' கொண்ட நிறுவனமாக வகைப்படுத்தி அதன் பயன்பாடுகளுக்குத் தடை விதித்திருந்தது.
அத்துடன், அண்மையில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் அத்தடையை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.