பகைமைச் சக்திகள் விரைவில் விரட்டியடிக்கப்படுவர்: ஈரானின் உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை
ஈரானின் தெற்கு கடல் பிராந்தியத்தில் இருந்து ‘பகைமைச் சக்திகளை’ ஈரானிய இராணுவம் அரபிக்கடல் வரை விரட்டியடித்துள்ளதாக அந்த நாட்டின் உயர்மட்டத் தலைவர் முஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
அத்தோடு, விரைவில் அரபிக்கடலில் இருந்தும் அவர்களின் நடமாட்டம் முற்றாக அகற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான்-ஈராக் போர் நினைவேந்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதன் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட செய்தி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும் சேதம்
ஈரானியப் படைகள் மற்றும் ஹோர்முஸ் நீர்ச்சந்தியின் பாதுகாவலர்களிடம் இருந்து பலத்த அடிகளை வாங்கிய எதிரிகள், அரபிக்கடலைத் தாண்டி ஈரானிய எல்லைக்குள் நுழையத் துணியவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு துணிந்த போதெல்லாம் அவர்கள் தமக்கே பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரபிக்கடலில் இருந்தும் எதிரிகளின் பிரசன்னம் முழுமையாகத் துடைத்தெறியப்படும் காலம் மிகவும் சமீபத்தில் வந்துவிட்டது என்றும் கமேனி தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.