போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்காவிட்டால் எரிபொருள் வரிசை வரும்..! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
இலங்கையில் புதிய எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை திருத்தியமைக்கத் தவறினால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் முழுமையாக ஸ்தம்பிக்கக்கூடும் என இலங்கை தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு கோரப்பட்ட கட்டணத் திருத்தத்தை 2026 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை என்று சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எச் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பினால், தாங்கி ஊர்திகளின் இயக்கச் செலவு உயர்ந்துள்ளதுடன், உதிரிப் பாகங்கள், டயர்கள் மற்றும் சேவைக்கான கட்டணங்கள் 50%க்கும் மேல் அதிகரித்துள்ளன.

இலங்கை கனிமவள கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவருடன் நேற்று(28.09.2026) இடம்பெற்ற சந்திப்பில், வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீர்வு கிடைக்காத பட்சத்தில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், ஏற்கனவே சில தனியார் தாங்கி ஊர்திகள் விநியோகத்தை நிறுத்தியுள்ளதால் பல இடங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.