தொடரும் சர்ச்சை!! ஈழத் தமிழர் வரலாற்றையே மறுதலிக்கும் சிங்கள தரப்பு(video)
வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை.
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று.
கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.
ஆக்கிரமிப்பு நடவடிக்கை
இந்த நிலையில் ஈழத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான காணியை உல்லாசத்துறை அபிவிருத்தியின் பெயரால் ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு வழமைபோன்று தொல்பொருள் திணைக்களத்தினரும், கிழக்கு மாகாண ஆளுநரும் ஆதரவளிக்கின்றனர் என்று ஆலய பரிபாலன சபையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திருக்கோணேஸ்வர ஆலய பகுதியைச் சுற்றுலா அபிவிருத்திக்கு உள்வாங்குவதற்கும் இதற்காக ஆலய காணியைச் சுவீகரிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எதிர்ப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தங்களது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் காரசாரமான விவாதங்களும் நடந்தன.
மேலும், நாடாளுமன்றத்தில் "நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி'' என்னும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரம் சிவஞானம் சிறிதரன் எம்.பியால் உரத்துப் பாடப்பட்டது.
திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சிறிதரனால் இந்தத் தேவாரம் உரத்துப் பாடப்பது.
அவர் நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பிக்க முன்னர், தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற மாணிக்கவாசகரின் அருள்வாசகத்தைக் குறிப்பிட்ட
பின்னரே, ''நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி'' என்ற திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரத்தை உரத்துப் பாடிவிட்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு அங்கு தற்போது இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் மிகவும் ஆவேசமான நிலையில் நீண்ட உரையை சிறிதரன் எம்.பி. ஆற்றினார்.
இலங்கையின் நீதித்துறையில் தமிழன் தீர்ப்பு வழங்கினால் செல்லாது; சிங்களவன் தீர்ப்பு வழங்கினால்தான் அது செல்லும் என்ற இனவாத சிந்தனையே குருந்தூர்மலை விவகாரத்தில் கையாளப்படுகின்றது என்றும், அனைத்து இடங்களிலும் தியானத்தில் இருக்கும் புத்தர் திருக்கோணேஸ்வரர் ஆலய மலையில் மட்டும் நிமிர்ந்து அமர்ந்திருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இராவணன் என்ற மன்னனே இல்லை..
மேலும், இராவணன் ஆண்ட காலத்தில் இந்த ஆலயத்தில் வந்து இராவணேஷ்வரன் வழிபட்டதாகவும் சிறிதரன் குறிப்பிட்டார்.
எனினும், அதனை மறுத்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இராவணன் என்ற ஒரு மன்னனே இருந்ததில்லை என்று சபையில் பகிரங்கமாக அறிவித்தார்.
இதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையில் வலுவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நாடாளுமன்றில் இந்த செய்தியை மறுத்து உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த ஆலயத்தின் சிறப்பு, முக்கியத்துவம், வரலாற்று உண்மைகள் மற்றும் உரியவர்களின் கருத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமந்து வருகின்றது எமது விசேட தொகுப்பு,
காணொளி - பதுர்தீன் சியானா

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
