திருக்கோணேஸ்வரத்திற்கு நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விதுர சபையில் அறிவிப்பு
திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய அங்கு விரைவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "வரலாறுகள் தொடர்பில் நான் பேச விரும்பவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த, இந்து புராதன அடையாளங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரலாற்றை நீங்கள் திரிபுபடுத்தக்கூடாது.
நேரடி விஜயம்
தொல்லியல் சட்டங்கள் மாற்றப்படும் வரை அதனைக் கடைப்பிடிப்பதே எமக்குள்ள தெரிவு. இதேவேளை, நான் திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய அங்கு விரைவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளேன்" என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், "நீங்கள் அங்கு வரும்போது ஆலய தரப்பினருடன் நாமும் பங்கேற்க முடியுமா?" என்று கேட்டார்.
கடும் எதிர்ப்பு வெளியிட்ட சரத் வீரசேகர
எனினும், இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினரின் விருப்பத்தின்படியே அங்குள்ள கடைகள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஆலய நிர்வாகமே அதனை விரும்பியுள்ளநிலையில் அந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்கக் கூடாது. இவர்கள் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்" - என்றார்.
தனது உரையைத் தொடர்ந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, "இந்தப் பிரச்சினை சிக்கலானது. எனவே, நான் இதனை பேசித் தீர்ப்பேன்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
