உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை..
ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவு தான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம்.
அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு.
இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”.
இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வது என்றால் அதுகூட ஏற்கனவே இருப்பவற்றுள் ஏதாவது ஒன்று எதிர்பாராத புதிய மாற்றங்களை அடைய வேண்டும்.
தமிழ் அரசியலில் ஏற்கனவே பலமாகக் காணப்படும் அம்சங்களில் அல்லது நபர்களில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும்தான் இயற்கை விதிக்கு மாறாக ஏதாவது அதிசயங்கள் அற்புதங்களை எதிர்பார்க்கலாம்.
எனவே, இப்பொழுது கடந்த ஆண்டின் முடிவில் எம்மிடம் இருப்பவற்றை முதலில் மதிப்பிடுவோம். கடந்த ஆண்டு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தோல்வி ஆண்டுதான்.

ஆண்டின் தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஓர் அரசாங்கம் ஏற்கனவே ஆட்சிக்கு வந்திருந்தது. ஆண்டின் முடிவில் அந்த அரசாங்கம் வடக்கில் முதலாவது பிரதேச சபையைக் கைப்பற்றி விட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசம் அமைந்திருக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிவிட்டது.
ஆட்சிக்கு வந்தவுடன் பறிப்போன தையிட்டி
ஆண்டின் தொடக்கமும் தோல்வி.முடிவும் தோல்வி. இடையில் செம்மணிப் புதை குழி புதிய வாய்ப்புகளைத் திறந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்தார்.
எனினும் ஐநா தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது மட்டுமல்ல அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியது. தமிழ் மக்கள் அனைத்துலக அரங்கிலும் பலமாக இல்லை என்பதே அது.
ஆண்டின் முடிவில், தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதி தமிழகத்தை நோக்கிச் சென்றது. இன்னொரு பகுதி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றது.இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக இந்தியாவை அணுகியபோது, இந்தியா கொழும்பை நோக்கி வந்தது.
கொழும்பில், இந்திய வெளியுறவு அமைச்சரைத் தமிழ்க் காட்சிகள் ஒன்றாகச் சந்தித்தன. ஆனால் இரண்டாகக் கோரிக்கைகளை முன் வைத்தன.தமிழரசுக் கட்சி ஒர் ஆவணத்தை என்வலப்பில் வைத்துக் கொடுத்தது.

அதில் என்ன இருந்தது என்று மற்றவர்களுக்குத் தெரியுமா?மக்களுக்குத் தெரியுமா? கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் மக்கள் பெற்ற பின்னடைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகக் கிடைக்கும் விடை என்ன தெரியுமா? ஒற்றுமையின்மையால் கிடைத்த தோல்வி.
எனவே புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமைவதாக இருந்தால் ஒற்றுமைப்படுவதைத்தவிர வேறு வழி இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை புத்தாண்டுத் தீர்மானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி
கடந்த ஆண்டு முழுவதிலும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொகுத்துப் பார்க்கலாம். புதிய நாடாளுமன்றத்தில் காணப்படும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாகச் செயல்படுவதற்கு கஜன் முயற்சி செய்தார்.
அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் அப்புதிய யாப்பை எதிர்ப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகத் திரளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு ஒத்துழைக்கவில்லை.
மற்றொரு முயற்சி,அதுவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அது தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை இணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் ஒரு முயற்சி. முதலில் தமிழ்த் தேசியப் பேரவை என்று உருவாக்கப்பட்டது.
அது அடுத்த கட்டமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கையானது எழுத்துமூல ஆவணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

எனினும், அந்தக் கூட்டுக்குள் காணப்பட்ட ஈபிஆர்எல்எஃப் கட்சியானது மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்று கேட்டு, தமிழ்ப் பகுதிகளில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்தக் கூட்டு பெருமளவுக்கு செயற்படா நிலையை அடைந்து விட்டது.
அந்தக் கூட்டு உருவாகும்போது கஜேந்திரகுமார் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஒரு கருத்து ஊன்றி கவனிக்கத்தக்கது. இந்த “ஐக்கியம் உடையுமாக இருந்தால் தமிழ் மக்கள் அதைத் தாங்க மாட்டார்கள்” என்று அவர் சொன்னார்.
அதன் பின்னர், ஐநா தீர்மானத்தை முன்னோக்கி, தமிழ்க் கட்சிகளை மீண்டும் இணைப்பதற்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.
அங்கேயும் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. ஐநாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின் அண்மையில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து உரையாடியிருக்கின்றன.
மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கிய பேச்சுவார்த்தை அது என்று ஊகிக்கப்படுகிறது. இவை யாவும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் நிகழ்ந்த ஐக்கிய முயற்சிகள் ஆகும். இந்த முயற்சிகள் அனைத்திலும் இரண்டு பொதுப் பண்புகளைக் காணலாம்.
முதலாவது பொதுப்பண்பு, இந்த முயற்சிகளை முன்னெடுத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. பின்னணியில் சில சிவில் சமூகங்கள் நின்றன. இரண்டாவது பொதுப் பண்பு, இந்த முயற்சிகள் பெரும்பாலானவற்றை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி. தமிழரசுக் கட்சியானது தானே பெரிய கட்சி, தானே முதன்மை கட்சி, தானே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று கருதுகின்றது கூறிக் கொள்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காகவும், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வாறான ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று தமிழரசுக் கட்சி நம்புகிறது.
மேலும், இந்த முயற்சிகளின் பின்னணியில் இருக்கும் சிவில் சமூகங்கள் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவை அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவானவை என்றும் தமிழரசுக் கட்சி நம்புகின்றது.

முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் பெரும்பாலானவை தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தும் நோக்கிலானவை என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. அதிலும் குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு.
தையிட்டியில் வெடித்த ஆர்ப்பாட்டம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது, சிறீதரனை அரவணைத்து அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியை தனக்குச் சாதகமாகக் கையாளப் பார்க்கின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு சுமந்திரன் அணியினர் மத்தியில் உண்டு.
இவ்வாறான சந்தேகங்கள், ஈகோக்கள் என்பவற்றின் விளைவாக கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை.
எனவே, கடந்த ஆண்டு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளில் பெரும்பாலும் குழப்பத்தை விளைவித்தது அல்லது ஒத்துழைக்க மறுத்தது அல்லது ஒரு பெரிய கட்சி, மூத்த கட்சி என்ற அடிப்படையில் பொறுப்போடு முடிவை எடுக்கத்தவறியது தமிழரசுக்கட்சி தான்.
இங்கே மிக அடிப்படையான பேருண்மை ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனக்குள் ஒற்றுமைப்படாத ஒரு கட்சி, ஏனைய ஐக்கிய முயற்சிகளுக்கு எப்படி ஒத்துழைக்கும்? இதுதான் கடந்த ஆண்டு. தொகுத்துப் பார்த்தால் அது ஒரு தோல்வி ஆண்டு. அந்தத் தோல்விக்குப் பெருமளவு காரணம் மூத்த, பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.
ஒரு மூத்த அண்ணனாக, பொறுப்போடு, பொறுமையோடு, பரந்த மனப்பான்மையோடு ஏனைய கட்சிகளை அரவணைத்து உண்மையான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் ஆண்டின் முடிவிலாவது குறைந்தபட்சம் கரைத்ததுறைப்பற்று பிரதேச சபையைக் காப்பாற்றி இருந்திருக்கலாம்.
எனவே இப்பொழுது மிகத்தெளிவான ஒரு பார்வை நமக்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளைப் போலன்றி புதிய ஆண்டின் பலன் நல்லதாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் உண்டு. அதுதான் ஐக்கியம். ஒற்றுமைப்பட்டால் மட்டும்தான் புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமையும்.
சில சமயம் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும், வெற்றிக்கு அதுதான் முன் நிபந்தனை. தையிட்டியில் நேற்று கட்சிகள் இணைந்தபடியால் தான் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் இப்பொழுது அதிசயம் அல்லது அற்புதம் என்று சொன்னால் அது ஐக்கியம் மட்டும்தான்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nilaa அவரால் எழுதப்பட்டு, 04 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan