அஹிம்சை போதித்தவரின் சிலையை அகற்றியமை இனவாதத்தின் உச்சம்... கடுமையாக சாடிய முன்னாள் எம்பி கஜேந்திரன்
திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்து இறக்கும் வரை விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்படாத அமைப்பாக இருந்த நிலையில் அகிம்சையை போதித்த தியாக தீபத்தின் திரு உருவச்சிலையை உடைத்து அகற்றியமை அநுர அரசின் இனவாதத்தின் உச்சநிலையை காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
நேற்று(27) நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் திரு உருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்ணன் திலீபன் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அகிம்சை வழியிலே தமிழ் மக்களுக்காக பல கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள தேசத்துக்கு எதிராக போராடிய ஒரு தியாகி. தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் தனது இன்னுயிரை தமிழ் மக்களுக்காக அகிம்சையின் எடுத்துக் காட்டாக உலகுக்கு போதித்து தனது உயிரை தியாகம் செய்தவர்.
அப்படிப்பட்ட ஒரு தியாகத்துக்கு தமிழ் மக்கள் தமது வழிபடும் உரிமையை நிறைவேற்றுவதற்கு சிங்கள பேரினவாதம் அனுமதிக்க மறக்கிறது.

அதன் ஒரு வெளிப்பாடாகவே நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் திரு உருவச்சிலையை இலங்கை பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை சப்பாத்து கால்களுடன் நினைவிடத்தில் ஏறி உடைத்து அகற்றிச் சென்றுள்ளனர்.
இந்த செயற்பாடு கீழ்த்தரமானதும் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் சிங்கள பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட செயற்பாடாகும்.
திலீபனின் திரு உருவச்சிலை
தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்குவோம் என தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கி வந்த தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக தமது சிங்கள பேரினவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் பார்வதி அம்மாக்கு சிலை வைப்போம் பிரபாகரனுக்கு சில வைப்போம் என தமிழ் மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி வாக்குகளை வேட்டையாடினார்கள்.
அவர்களுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற வேட்பாளர்களும் புலிகளை புகழ்ந்து பேசி வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டு நாடாளுமன்ற ஆசனங்களை தக்க வைத்தார்கள்.

தேர்தல் முடிந்து இரண்டு வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வல்வட்டித் துறையில் சிலைகளை வைக்க முடியவில்லை. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அகிம்சை போராட்டத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய தியாக தீபம் திலீபனின் திரு உருவச்சிலையை தமிழ் மக்கள் வழிபட தடுப்பதற்கு அரசின் கைக்கூலிகளுக்கு எந்தவித அருகதையும் கிடையாது.
ஆகவே அகற்றப்பட்ட தியாக தீபத்தின் திரு உருவச்சிலையை அதே இடத்தில் நிறுவுவதற்கு அனைவரும் ஊரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.