பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நடந்த திருட்டு - இவரை கண்டால் அறிக்கவும்..! பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
ஹட்டன் - தனியார் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (06.10.2026) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெறுமதியான பொருட்கள் திருட்டு
குறித்த வர்த்தக நிலையத்தின் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளையும் உடைப்பதற்கு, சந்தேகநபர் சுமார் ஒரு மணித்தியாலம் செலவிட்டுள்ளதுடன், பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 28 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுநாள் வர்த்தக நிலையத்திற்கு வந்த உரிமையாளர், கடையின் கதவு திறந்த நிலையில், இருப்பதை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கேமராவில் சிக்கிய சந்தேக நபர்
இந்த நிலையில், திருட்டுச் சம்பவம் இடம்பெறும் விதம் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிரந்தியின் சிரிலிய கணக்கில் 129 சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்! சீனாவிலிருந்து வந்த எழுபது இலட்சம்..