தேர்தலில் ரணில் களமிறங்கவுள்ள சின்னம் குறித்து வெளியான தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இதயம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகின்றார்.
மேலும், அவர் இதயம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என பிரதான இணையத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் அவ்வாறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் சின்னம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதயம் சின்னத்தின் கீழ் எந்த அரசியல் கட்சியும் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இதயம் சின்னத்தின் கீழ் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சின்னமானது, உலகில் அன்பின் சின்னம் மட்டுமே எனவும் அது உண்மையான இதயப் பிரதியல்ல எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதயம் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அந்த சின்னத்தில் கட்சிகளோ அல்லது சுயேச்சை குழுக்களோ பதிவுசெய்யப்படவில்லை என்பதுடன் அவ்வாறான சின்னத்தில் கட்சியையோ அல்லது சுயேட்சைக்குழுவையோ பதிவுசெய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |