இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை : பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும், பாடசாலைகளில் வெளிக்கள செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தவிர்க்குமாறும் கட்டளைகளை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (03.04.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் தமது பிள்ளைகளை வெயிலில் அலையவிடாமல், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாமையும், அவர்களுக்கு தேவையான நீர், ஓய்வு ஆகியவற்றை சரியாக வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிக வெப்பநிலையில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிக உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது அது உயிருக்கே ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதால், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் முன்னெச்சரிக்கை வைப்பது அவசியம் எனவும் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் அதிக நீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வாகவும், அவதானமாகவும் அவர்களை கவனிக்க வேண்டும்.
அத்துடன், இந்த காலப்பகுதி ஒரு அபாயகரமான சூழ்நிலை எனக் கருதி, வெளியில் செல்வதை தவிர்க்கவும், தேவையான நீர் ஆகாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.