கொழும்பில் குடிதண்ணீர் தட்டுப்பாடு - இன்னும் 20 நாட்களுக்கே நீர் இருப்பு!
தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கான குடிதண்ணீர் விநியோகம் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.
கொழும்பு நகருக்குக் குடிதண்ணீர் வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே விநியோகிப்பதற்கான நீர் எஞ்சியுள்ளது என்று சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்தார்.
நீர் இருப்பு
இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் இருப்பு உள்ளதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெப்பமான காலநிலையினால் பொதுமக்களின் நீர் நுகர்வு சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் நாள்களில் குடிதண்ணீர் உற்பத்தியில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை எச்சரித்துள்ளது.
நிலவும் வறட்சியான சூழலைக் கருத்திற்கொண்டு, நுகர்வோர் குடிதண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். குறிப்பாக, அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நிலவும் நெருக்கடியைச் சமாளிக்க ஒத்துழைக்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.