நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை
நியூயோர்க்கில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் தரமானதாக இல்லை என்பதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து எஞ்சியுள்ள போட்டிகளுக்கு அவற்றை சரிசெய்ய மைதான ஊழியர்கள் பணியாற்றி வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி
எனினும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக அந்த போட்டிகளில் குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டன என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆடுகள அமைப்பில் பந்து மேழெழும் தன்மை (bounce) காரணமாக துடுப்பாட்டத்தை மிகவும் கடினமாக்கியது என கூறப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அதேநேரம் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்
இந்த நிலையில் உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு நேற்றைய ஆட்டத்தின் பின்னர் நிலைமையை சரிசெய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளுடன் இன்னும் ஆறு போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முன்னதாக இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர் இது சவாலான விக்கெட் களம் என்று வர்ணித்தார்.
எனினும் உள்ளது உள்ளபடியே இருக்கும் எனவே அதைச் சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் அதனை சமாளிக்க போதுமான திறமையும், போதுமான அனுபவமும் இருப்பதாக தாம் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |