இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி : ஐசிசியிடம் முறைப்பாடு
2024 T20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது இலங்கை அணி எதிர்கொண்ட நீண்ட பயண நேர இன்னல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (07) காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அணியின் வசதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை கிரிக்கெட் (SLC) பிரதிநிதியிடம் தனியான விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
“இலங்கை, அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் தங்களது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் தரித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு தடை
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளதாகவும் பங்களாதேஷ் அணி அதிக கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து இலங்கை உள்ளது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்க கிரிக்கெட் சபை தற்போது ஐசிசியால் தடைசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் ஐசிசி இந்த போட்டியை அமெரிக்காவில் நடத்துகிறது" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அணிக்கு அசௌகரியம் இல்லை என்பதை உறுதிப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபையினால் பிரதிநிதியை அனுப்புமாறு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பு நாங்கள் அறிவுறுத்தினோம்.
இதற்காக கிரிக்கெட் அமைப்பு ஒருவரை நியமித்தது. அவர் அங்கு இருந்துள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, ஐசிசியின் அநீதிகளுக்கு எதிராக நாடு எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
https://chat.whatsapp.com/Dwz2rha14ZBKC2V5dPYyjb |