வட மாகாணத்தில் தொடரும் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டங்கள்
அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ சேவை ஊழியர்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சேவை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை என கூறி குறித்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவில் பணிப்பகிஷ்கரிப்பு
முல்லைத்தீவு மாவட்ட, மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர், 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது நாளாக இன்றும் (11.01.2024) போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
அத்துடன், சிகிச்சை பெறவந்த நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்துக் கலவை நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கண் மருத்துவ நிபுணர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் போராட்டம்
இதேவேளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், வைத்தியசாலை சிற்றூழியர்கள், சுகயீன விடுமுறையில், கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி : திலீபன்
மன்னாரில் போராட்டம்
வடக்கு மாகாணத்தில் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள அதிகரிப்பு மற்றும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
செய்தி : ஆசிக்
செட்டிகுளம் வைத்தியசாலை போராட்டம்
செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறையில், கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி : திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |