திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம்! காலத்தாமதமாக கிடைத்த கடிதம் தொடர்பில் கடும் குற்றச்சாட்டு
திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு காலதாமதமாக கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ பதில் கடிதங்கள் தொடர்பில் சட்டத்தரணியும், சமூக ஆர்வலருமான தனுக ரனன்ஞக கஹந்தகமகே விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்
2026 செப்டெம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் HRC/HO/3871/26 என்ற இலக்கத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தேன்.

இந்நிலையில், 2026 நவம்பர் 17ஆம் திகதியான இன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்து அனுப்பப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ கடிதங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
இந்தக் கடிதங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் காணப்படும் காலதாமதம் மற்றும் நடைமுறை நியாயம் தொடர்பான கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.
முதலாவது கடிதம் 2026 ஒக்டோபர் 21ஆம் திகதியிடப்பட்டிருந்தது. அதில், சத்தியக்கடதாசிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்களின் ஆதாரங்களை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
குறித்த காலக்கெடுவுக்குள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், மேலதிக ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
காலக்கெடு முடிவடைந்து கிடைத்த கடிதம்
ஆனால், நவம்பர் 5ஆம் திகதியே காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கடிதம் காலக்கெடு முடிவடைந்து 12 நாட்களுக்குப் பின்னரே எனக்குக் கிடைத்துள்ளது.
அதேவேளை, இரண்டாவது கடிதம் 2026 ஒக்டோபர் 28ஆம் திகதியிடப்பட்டிருந்தது. அதில், வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் விரிவான பொலிஸ் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் 17ஆம் திகதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்தக் கடிதமும் எனக்கு அதே நவம்பர் 17ஆம் திகதியன்றே கிடைத்துள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்மட்ட நிறுவனம் ஒன்று, காலக்கெடுவுடன் தொடர்புடைய முக்கியமான அறிவித்தல்களைக்கூட உரிய நேரத்தில் அனுப்ப முடியாத நிலையில் இருப்பது வெறுமனே நிர்வாகத் தவறாகக் கருதப்பட முடியாது.
இவ்வாறான காலதாமதங்கள் இயற்கை நீதிக்கான அடிப்படைக் கோட்பாடுகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன. சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படும் வகையில், பொறுப்புணர்வுடனும் உரிய காலத்திலும் செயற்படும் நிறுவனங்களையே இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது.
இந்த விவகாரம் நிர்வாக நடைமுறைகளுக்குள் புதைக்கப்படுவதற்கோ அல்லது காலப்போக்கில் மறக்கப்படுவதற்கோ நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நீதியை நிலைநாட்டும் வரை எனது போராட்டம் தொடரும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எனது பணிவான வேண்டுகோள்: நீதியை வெளியே வைத்திருப்பதற்காக, உங்கள் மனச்சாட்சியைச் சுற்றி நான்கு சுவர்களைக் கட்டியெழுப்பாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
