சகோதரனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இராணுவ அதிகாரி:இரு வேறு இடங்களில் தாக்குதல்களில் இருவர் பலி
மாத்தறை பகுதியில் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் 39 வயதுடைய இராணுவ அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்கம வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தகராறின் போது, 39 வயதுடைய இராணுவ அதிகாரி ஒருவர் தனது சகோதரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்கம வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், உயிரிழந்தவரின் சகோதரர் வாளால் வெட்டி இந்தக் கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் வல்கம வடக்குப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இராணுவ அதிகாரி ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அவரது சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கெட்டிவெல பகுதியில் நேற்று (16) காலை அயல்வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோடரியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கெட்டிவெல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சந்தேகநபர் கோடரியால் தாக்கியதில் இக்கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கல்கெட்டிவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விரு கொலைச் சம்பவங்கள் குறித்தும் மாத்தறை மற்றும் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.