உடனடியாக வைத்திய சிகிச்சை பெறவும்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும், சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு பாதகமான நிலைகளுக்கு உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200-ஐத் தாண்டியுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் சீரற்ற வானிலை
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்லை தாண்டிய காற்றுச் சுழற்சி மூலம் காற்று மாசுபடுத்தும் துகள்கள் நாட்டிற்குள் நுழைவதே இதற்கு முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில பகுதிகளில் திறந்தவெளிகளில் பனிமூட்டம் போன்ற தோற்றம் காணப்படுவதாகவும், இது வளிமண்டலத்தில் உள்ள தூசி மற்றும் பிற துகள்களால் ஏற்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, இந்த நிலை மேலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்குத் தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் இதில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறானவர்களுக்கு ஒவ்வாமை அல்லது சுவாச சிரமங்கள் ஏற்பட்டால், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை காலையில் இன்னும் தெளிவாக காண முடியும் என்றும், அடுத்த சில நாட்களில் நிலைமை தணியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே காற்றில் உள்ள தூசுத்துகள்களால் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைப்பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.