நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பட்டிப் பொங்கல் விழா
தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கலை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேட விதமாக பசுக்கள் பட்டு வஸ்த்திரங்கள், பூமாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.
மக்களின் வாழ்வில் ஒன்றர கலந்த பசுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இது கருதப்படுகிறது.
இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர். குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்தில் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (15.01.2024) காலை 08.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
பட்டிப்பொங்கல் விழா கோமாதா உற்சவ பவனி
பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.
அங்கிருந்து கோபவனியானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியூடாக வந்து ஆலயத்தினை சென்றடைந்தது.
ஆலய பிரதம குரு ஸ்ரீகந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ம.ரஜீவன், ப.இளங்குமரன், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சமயத் தலைவர்கள், வியபார ஸ்தாபன உரிமையாளர்கள், சமயப் பெரியோர்கள், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி
பட்டிப்பொங்கல் தினமான இன்று தமது வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு பொங்கல் பொங்கி மக்கள் நன்றி செலுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சியிலும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தமது கால்நடைகளுக்கு நன்றி செலுத்தினர்.
மத நல்லிணக்க பொங்கல்
இன்றையதினம் (15) தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மதக் குழு உறுப்பினர்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுண்டுக்குழியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக கேதீஸ்வரசர்மா குருக்களும், அருட்தந்தை அருட்பணி. செபஸ்ரியாம்பிள்ளை அன்ஸ்லி றொஷான் அடிகளாரும், மெளலவி அஸ்லம் அவர்களும் இணைந்து சிறப்பித்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இன மத பாகுபாடின்றி ஒரே குடும்பமாக இணைந்து பொங்கல் பொங்கினர்.
நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக் குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலை யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஜென்சி வசதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.பி அபயவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் குருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் செய்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு வழிபாடகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் களுவாஞ்சிக்குடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்திலும் நடைபெற்றது.
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பு பூஜை வழிபாடுகள் செவ்வாய்கிழமை களுவாஞ்சிக்குடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இப்பூஜை வழிபாடுகளில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியாவில் கோமாதா வழிபாடு
விவாசாயிகளுக்கு கைகொடுக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வவுனியாவில் கோமாதா வழிபாடும், மாட்டுப் பொங்கலும் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் மற்றும் வவுனியா கந்தசாமி ஆலயம் என்பவற்றில் இன்று (15.01) மாலை மாட்டுப் பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ் மக்களின் பாராம்பரிய உழவர் திருநாளான தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கோமாதா வழிபாடும் மாட்டுப் பொங்கலும் இடம்பெறுவது வழமை. விவசாய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமது மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டு பொங்கலும், கோமாதா வழிபாடும் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைவாக வவுனியா கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் மாட்டுப் பொங்கல் இடம்பெற்றது.
இதன்போது மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாலை அணிவித்து, பொங்கல் பொங்கி மாட்டுக்கு படைத்தும், அதற்கு உணவளித்தும் வழிபாடுகள் இடம்பெற்றது.
இதேபோன்று வவுனியா கந்தசாமி ஆலயத்திலும் மாட்டுப் பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் அந்தண சிவாச்சாரியார்கள், ஆலய பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சேனையூரில் பட்டிப் பொங்கல்
மூதூர் கிழக்கு சேனையூரில் ஊரில் பட்டிப் பொங்கல் தனித்தன்மை மிக்கது.
பொன்னாவரம் பூவால் மாலையிட்டு அலங்காரம் செய்யும் மரபு.பலகார மாலை நெத்திப் பட்டம் என மாடுகளை அழகுபடுத்தி கொண்டாடுதல். காலையில் வீட்டில் பந்தலிட்டு படையலிடுதலும்.மாலையில் ஊருக்கு புறத்தில் இருக்கும் பட்டிகளுக்கு பொங்லிடலும் மரபு இன்று புதன்கிழமை (15) மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.