மக்களின் வருமானத்தை பாதிக்கும் நிர்வாக முடக்க போராட்டமானது தேவையா! அங்கஜன் இராமநாதன்
மக்களின் வருமானம் பாதிக்கலாம் தமது வருமானம் பாதிக்கக் கூடாது என செயற்படுவோரை இந்த நிர்வாக முடக்கம் அடையாளம் காட்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் 7 கட்சிகள் ஒன்றாக அழைப்பு விடுத்த இன்றைய நிர்வாக முடக்க போராட்டமானது இக்காலத்துக்கு உகந்ததா என்பதை குறித்த மக்கள் பிரதிநிதிகள் சிந்திக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
இந்த நிர்வாக முடக்கலானது மக்களுடைய இயல்பு வாழ்வை பாதித்துள்ளதே தவிர, அரசாங்கத்தையோ அல்லது அதனுடைய இயக்கத்திலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களை மேலும் பாதிக்கச் செய்யும் ஓர் போராட்ட வடிவம் எமக்கு எந்தவகையிலும் கைகொடுக்காது.
அன்றாட வருமானத்தை பெறுவோர், சிறு வணிகர்கள், தனியார் பேரூந்து ஓட்டுநர்கள், கடற்றொழிலாளர்கள், சந்தை வியாபாரிகள், விவசாயிகள் என வருமான மட்டத்தில் குறைந்த நிலையில் இருப்போரை வஞ்சித்துள்ள இந்த நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்தவர்களும், ஆதரவு கொடுத்தவர்களும் இன்று நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்காமல் வந்திருக்கிறார்கள்.
அங்கே அன்றாட வருமானம் பெறுபவனை நிர்க்கதியாக்கி விட்டு, இங்கே நாடாளுமன்ற கூட்டத்துக்கான வருமானத்தை பெறுவதற்காக தம்மை மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.
மக்கள் மட்டும் தமது அன்றாட பணிகளை பகிஸ்கரிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இத்தகைய அரசியல் தலைவர்கள் ஒருபோதும் தாம் தமது வருமானத்தை பெறும் பணிகளை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது இன்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
தமது நலனுக்காக மக்களை பகடைக்காய்களாக்கும் கபடதாரிகளாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வாக்கு அரசியல்
வாக்கு அரசியலுக்காக தம்மை தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டும், தனித்தனியான கொள்கையுள்ளவர்களாக சொல்லிக்கொண்டும், ஒருவருக்கொருவர் கடுமையான தனிமனித விமர்சனங்களை செய்துகொண்டும் இருந்தவர்கள் தான் இன்றைய இந்த மக்களை பாதிக்கும் நிர்வாக முடக்கலுக்கு ஒன்றாக அழைப்பு விடுத்தவர்கள்.
அரசியல் ரீதியாக பலமான போராட்டமொன்றை மேற்கொள்ள முடியாத தரப்புகள் தமது இருப்பை காட்டிக்கொள்ளும் முகமாக செய்யும் ஒரு இலகுவான போராட்டமாகவே நிர்வாக முடக்கம் என்பது இன்றைய நாளில் பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டமென்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டியது.
ஏற்கனவே பல ஆண்டுகளான பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரால் எமது மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டார்கள்.
எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் தமது வாழ்நாட்களை இழந்தார்கள்.
எமது மக்களை பாதித்த அந்தச் சட்டம் இப்போது தென்னிலங்கை மக்களையும் பாதித்துள்ளது. அதன் தாக்கத்தை அவர்களும் இப்போது உணர்கிறார்கள்.
அவ்வாறான சூழலில் குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிவரும் சூழலில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் இன்னும் அதிகமாக எம்மை அடக்க நினைக்கும் ஓர் சட்டமூலம் இங்கே உருவாகிறது.
கருத்துச்சுதந்திரத்துக்கு பெரிதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஓர் சட்ட வடிவமாக இது பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின் பெயரால் எமது மக்களை மேலும் அடக்க நினைக்கும் அரசின் இந்த நடவடிக்கையை நாமும் எதிர்க்கின்றோம்.
அரசியல் போராட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நாமும் ஈடுபட்டுள்ளோம். இந்த சூழலில் இன்றைய நிர்வாக முடக்க போராட்டத்தின் நோக்கத்துக்கு மதிப்பளித்து எமது வர்த்தக நடவடிக்கைகளையும் நாம் இன்று நிறுத்தியுள்ளோம்.
இருந்தாலும் சாதாரண மக்களினதும், அன்றாட வருமானம் பெறுவோரையும் இந்த நிர்வாக முடக்கம் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
நான் அந்த மக்களைப் பற்றியும் சிந்திக்கிறேன்.
நிர்வாக முடக்கம் ஊடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இல்லாமலாக்க முடியாது.
அதை அரசியல் மட்டத்தால் மட்டுமே நீக்க முடியும். மக்களை வீட்டுக்குள் முடங்கியிருக்க சொல்வதன் ஊடாக இந்த அரசியல் போராட்டத்தை செய்ய முடியாது.
நிர்வாக முடக்கங்கள் ஒருநாள் செய்தியாக மட்டுமே கடந்துபோகும் என்பதை அனைத்து
மக்கள் பிரதிநிதிகளும்இ அரசியல் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே
இனிவரும் காலங்களில் மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் இத்தகைய போராட்ட
வடிவங்களை கைவிட வேண்டும் என குறிப்பிட்ட தரப்பினரை கேட்டுக் கொள்கிறேன்
என்றுள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
