விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி: எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது பயணக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
வெளியான தகவல்களின்படி, விமான எரிபொருள் (Jet Fuel) விலை கடந்த சில நாட்களில் பாரிய அளவில் உயர்ந்துள்ளதால், அந்த மேலதிக செலவை ஈடுகட்ட "எரிபொருள் கூடுதல் கட்டணம்" (Fuel Surcharges) என்ற பெயரில் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நீண்ட தூர சர்வதேசப் பயணங்களுக்கான கட்டணங்கள் 10% முதல் 15% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணக் கட்டண உயர்வு
அதேவேளையில், பங்குச் சந்தையில் விமான நிறுவனங்களின் பங்குகள் ஆரம்பத்தில் சரிவைச் சந்தித்தாலும், தற்போது ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு (Stabilise) திரும்பியுள்ளன.
பயணக் கட்டண உயர்வு மூலம் நிறுவனங்களின் இலாபம் பாதுகாக்கப்படும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.

எமிரேட்ஸ், லுஃப்தான்சா மற்றும் டெல்டா எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது கட்டணக் கொள்கைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன.
போரின் கால அளவைப் பொறுத்தே எதிர்காலத்தில் கட்டணங்கள் மேலும் உயருமா அல்லது குறையுமா என்பது தீர்மானிக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.