வடக்கு மாகாணத்தில் நிர்வாக முடக்கம்(Video)
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய நிர்வாக முடக்கப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் வவுனியாவிலும் பல பகுதிகளில் நிர்வாக முடக்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
தற்போது இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் (29.04.2023) கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புகளின் ஆதரவையும் கோரி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி-ராகேஷ்
யாழ்ப்பாணம்
நிர்வாக முடக்கத்தினால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியுள்ளது.
தனியார் போக்குவரத்து துறையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையால் தனியார் பேருந்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலைகளும் மூடப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
செய்தி-கஜிந்தன்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்கள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை எனினும் அரச திணைக்களங்கள், அரச பேரூந்துகள் வழமை போன்று இயங்குவது குறிப்பிடத்தக்கது.
செய்தி-திலீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்திலும் நிர்வாக முடக்கலுக்கான ஒத்துழைப்பை அனைத்து தரப்பின மக்களும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை அனைத்து மூடப்படுள்ள வர்த்தக நிலையங்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் அவ்விடங்களுக்கு சென்று பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-வருணன்