கிழக்கு உக்ரைனின் ரஷ்யாவின் தாக்குதல்: 12 பேர் பலி
கிழக்கு உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dniprotrovsk) பிராந்தியத்தில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான (Drone) தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிசக்தி நிறுவனமான DTEK-க்கு சொந்தமான இந்தப் பேருந்து, தொழிலாளர்களை வேலையை முடித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திட்டமிட்டுத் தாக்கப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
12 பேர் பலி
இந்தப் பிராந்தியத்தில் மற்ற இடங்களில் நடந்த தனித்தனி தாக்குதல்களில் மேலும் மூவர் கொல்லப்பட்டதுடன், மொத்தம் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், ஜப்போரிஜியா (Zaporizhzhia) பகுதியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதல் "வாழ்க்கைக்கு எதிரான போர்" என்று உக்ரைன் அதிகாரிகள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஒரு வார காலத்திற்குத் தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் அளித்த வாக்குறுதிக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளன.
ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்
கடும் குளிர்காலத்தில் உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை அபுதாபியில் தொடங்கவுள்ளது.
முதலில் ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பேச்சுவார்த்தை, சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.