தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம் என கூறும் தமிழர்கள்!..அரியநேத்திரன் எழுப்பியுள்ள கேள்வி
தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம் என கூறும் தமிழர்கள் எந்த பெரும்பான்மை இன வேட்பாளரை என்ன கொள்கையில் ஆதரிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (Ariyanethiran) கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இரண்டு தடவை ஜனாதிபதியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksha) ஆட்சிக்காலத்தில் 2006 மார்ச் 12 அல்லப்பிட்டி தேவாலயம் தொடக்கம் 2009 மே 18 வரை இடம்பெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வரலாறுகளை மறக்க முடியாது.
கிடைக்காத தீர்வு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் (R. Sampandhan) தலைமையில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தி ஏமாற்றப்பட்ட வரலாறுகள் பல உண்டு.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithiripala Sirisena) ஜனாதிபதியாக செயல்பட்ட காலத்தில் நல்லாட்சி எனும் பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு திருத்தம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு கிடைக்கும் என மைத்திரியும், அப்போதைய பிரதமர் ரணிலும் கூறியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.
தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickramasinghe) தமிழ் இனப்பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வையும் வழங்கமுடியாதவராகவே உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வை முன்வைத்தார்? இப்படியான முதுகெலும்பு இல்லாதவருக்கா தமிழர்கள் வாக்களிப்பது?
தமிழ் இனப்பிரச்சனை
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதியாக தெரிவானால் அவரிடம் தமிழ் இனப்பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறை என்ன?
கடந்த 2006இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையை ஏற்று, இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றுக்கு சென்று சட்ட ரீதீயாக பிரித்தவர்கள் இந்த அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சிதான்.
இவரிடம் தமிழ் இனப்பிரச்சனைக்கான எந்த திட்ட வரைவும் இல்லை, இப்படியானவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா?அவருடன் பேசி எதை எதிர்பார்ப்பது?
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஒற்றுமையாக நிறுத்தி வடக்கு கிழக்கு மக்களின் தனித்துவ அபிலாசைகளில் தமிழர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் உள்ளனர் என்பதை ஒரே ஒரு தடவை நிரூபிப்பதற்காக இந்த பொதுவேட்பாளர் விடயத்தை சாதகமாக பரிசீலிப்பதே நல்லது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |