தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஸ்வீடன் பிரதமர் பதவி விலகல்
ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தினால் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மொத்தம் 349 இடங்களைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், எதிர்க்கட்சியான மைய இடதுசாரி கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது.
தேர்தலின் பின்னர் பதவி விலகல்
பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தலைமையிலான ஆளும் வலதுசாரி கூட்டணி 173 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு, தமக்கு பிரதமர் பதவியிலிருந்து விலக அனுமதி அளிக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகளையடுத்து, நான்கு வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவியான மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைய சிறிது காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.