வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் - இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகியுள்ள தாழமுக்கம், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாழமுக்கம் ஏற்படும் அபாயம்
இந்த தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது புயலாக மாறினால், பங்களாதேஷ் வழங்கியுள்ள அர்னாப் (Arnap) என்ற பெயர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புயலால் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் நேரடியான பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் பிரதீபராஜா, எனினும் இதன் காரணமாக அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் மிக்க காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 19.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகள் கனமழை
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பதிவாகி வரும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும், இந்த நிலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக எதிர்வரும் 20.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கான சாதகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஆரம்பகட்டமாக தற்போது உருவாகியுள்ள தாழமுக்கத்தை கருதலாம் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழையுடன் கூடிய வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையே பல்வேறு வானிலை மாதிரிகள் வெளிப்படுத்துவதாகவும், எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.