தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தத்தில் செயற்படும் அரசு! விமல் கட்சி கண்டனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர இக்கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைத்துள்ள ஆட்சி
"இந்த அரசு ட்சிக்கு வந்தது முதல், நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் இலக்கு வைத்துச் செயற்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு புலனாய்வு அதிகாரியைச் சிறையில் அடைப்பதன் மூலம் அரசு தனது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய அரசு தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, அவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறியுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இவ்வாறு வேட்டையாடுவது, நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு கட்டமைப்பையும் சீர்குலைக்கும் செயலாகும்.
வெளிநாட்டில் தூதரகப் பணியில் சுரேஷ் சலே
சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமும் அற்றவை. 2019ஆம் ஆண்டு தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் வெளிநாட்டில் தூதரகப் பணியில் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.

அரசு தனது பொருளாதாரத் தோல்விகளையும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்கவே இத்தகைய கைது நாடகங்களை அரங்கேற்றுகின்றது.
இக்கைது நடவடிக்கையானது தற்போதைய புலனாய்வுப் பிரிவினரிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலேயே குறியாக உள்ளனர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக எமது கட்சி தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும்." - என்றார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam