யாழில் சகல சபைகளிலும் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கும்: சுமந்திரன் நம்பிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை ஆட்சி அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடவை தேர்தலின்போது மேயர், நகர பிதா மற்றும் தவிசாளர் யார் என அறிவிப்பதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஆகையினால் தேர்தலுக்குப் பின்னர் தான் அது யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அநேகமாக புதியவர்கள் பலர் கட்டாயம் நியமிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
செலுத்தப்பட்டது கட்டுப்பணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும்போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை யாழ். தேர்தல் திணைக்களத்தில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி செலுத்தியது. இந்த கட்டுப்பணத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் செலுத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கலைச் செய்வதற்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று செலுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் போட்டியிடுவதற்குக் கட்டுப்பணத்தைச் செலுத்தியதுடன் வேட்புமனுப் படிவங்களையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.
மத்திய செயற்குழுவின் தீர்மானம்
யாழ். மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த முறை நிர்வாகத்தை அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இந்தத் தடவை தேர்தலின்போது மேயர், நகர பிதா மற்றும் தவிசாளர் யார் என அறிவிப்பதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஆகையினால் தேர்தலுக்குப் பின்னர்தான் அது யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அநேகமாகப் புதியவர்கள் பலர் இம்முறை கட்டாயம் நியமிக்கப்படுவார்கள். தமிழரசுக் கட்சிக்கு அதிகமான வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு அதிகமானவர்கள் இருப்பதால் யாரை நிறுத்துவது என்பதில் இழுபறி நிலை இருக்கின்றது.
அது வழமையாக எங்களுக்கு இருக்கின்ற ஒரு பிரச்சினைதான். முதன்மையாக இருக்கின்ற கட்சிகளில் போட்டியிடுவதற்குப் பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் எமக்கு இழுபறி வந்தாலும் அதனை நாங்கள் சுமுகமாகத் தீர்த்துக்கொண்டு யார், யார் வேட்பாளர்கள் என்பதைத் தீர்மானிப்போம்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |