ரோயல் பார்க் கொலை வழக்கு: மைத்திரிக்கு நீதிமன்று அழைப்பாணை
முன்னாள் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தண்டனை வழங்காததற்கான காரணங்களை சமர்ப்பிக்குமாறே மைத்திரிபாலவுக்கு இற்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகை
கடந்த ஆண்டு இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்கான காரணத்தை முன்வைக்குமாறு தெரிவித்து குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |