தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் திடீர் சோதனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான அரிசி உள்ளிட்ட பல உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் மூன்று உணவகங்கள் உட்பட 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திடீர் சோதனை நடவடிக்கை
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பருத்தித்துறை நகரில் மக்கள் அதிகளவில் திரளும் பரபரப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை நேற்று (04.11.2026) மாலை 5 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர சபைத் தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் இந்தத் திடீர் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கையின்போது 3 உணவகங்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் செயற்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்

அத்துடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதி திகதி கடந்த பாஸ்மதி அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி குறிப்பிடப்படாது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராமிற்கும் மேற்பட்ட குத்தரிசிப் பொதிகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிகளை மீறிச் செயற்பட்ட 3 உணவகங்கள் மற்றும் 7 வர்த்தக நிலையங்கள் என மொத்தம் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பருத்தித்துறை நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி: மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் ஆணையம் News Lankasri