நெடுஞ்சாலைகளை கட்டுக்குள் கொண்டுவந்த சூடான் இராணுவம்
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும் இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகச் சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.
எதிரணித் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளின் (RSF) முற்றுகையில் இருந்த எல்-ஒபெயித் நகரைக் காப்பாற்றவும், RSF படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் இந்த வெற்றி சூடான் இராணுவத்திற்குப் பெரிதும் உதவும்.
நெடுஞ்சாலைகள் முடக்கம்
கடந்த இரண்டு நாட்களாக RSF படைகளுடன் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பிறகு, இந்த நெடுஞ்சாலையில் உள்ள பல நகரங்களையும் கிராமங்களையும் மீட்டுள்ளதாகச் சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உம் குர்ஃபா மற்றும் ஜாரிகாக் ஆகிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின் போது எதிரணிக்கு பெரும் உயிர்ச்சேதமும் தளவாடச் சேதமும் ஏற்படுத்தப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த முக்கிய நெடுஞ்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் தலைநகருக்கும் கொர்தோஃபான் பகுதிக்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு நேரடிப் போக்குவரத்துத் தொடர்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. தகவல்கள்
அத்துடன், இராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்களை விரைவாக
எல்-ஒபெயித் நகரத்திற்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

RSF படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பாதை கை மாறியுள்ளதால், அந்த நகரில் உள்ள சுமார் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மனிதநேய உதவிகள் இனி எளிதாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.