முன்னாள் சுகாதார அமைச்சர் ஏன் கைதுசெய்யப்படவில்லை..! கேள்வியெழுப்பிய நலிந்த ஜயதிஸ்ஸ
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை செலுத்திய சம்பவம் தொடர்பில் இன்னும் ஏன் முன்னாள் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமைச்சரின் ஒப்புதல் மற்றும் ஆலோசனையின் கீழ் மருந்துகளின் கொள்வனவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் சிலர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் ஒப்புதல் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரின் அனுமதியின்றி 3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது.
கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்
உரிய கேள்விப்பத்திர நடைமுறையை பின்பற்றாமல் அவசர கொள்முதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் சம்பவத்திற்கு சுகாதார அமைச்சு முழுப்பொறுப்பேற்க வேண்டும். ரம்புக்வெல்ல உட்பட இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்தநிலையில் குற்றப்புலனாய்வுத்துறையினர், அமைச்சர் ரம்புக்வெலவின் வாக்குமூலத்தைக் கூட பதிவுசெய்யவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அத்துடன் ஜனாதிபதியும் அமைச்சரவை உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சரை பாதுகாக்க முயற்சிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |