பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்
பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
லிந்துல பகுதியில் இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
பணி இடைநீக்கம்
சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தாபன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் திணைக்களம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.