லிந்துல பகுதியில் இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றுவழிப் பாதையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலை உருவாகும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.
அரச அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடப் போக்குவரத்து, பாடசாலைச் செல்லுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாணவர்கள் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லும் அவல நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியை பார்வையிட்டுச் சென்றிருந்த போதிலும், பாலத்தை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, உடனடியாக தற்காலிகப் பாலம் ஒன்றை அமைப்பதற்கும், நிரந்தரத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri