சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் திருத்தப்பட்ட புதிய சட்ட விதிகளை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் நிருவாக விதிகளுக்கு அமைவாக, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமாரவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் எவரேனும் சிறைச்சாலைகளில் கைதியாக அடைக்கப்படும் போது, அவர்களின் காவி உடையை அகற்றுவதற்கு முன்னர், கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 07 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பீடம் அல்லது பிரிவின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காவி உடை அகற்றுவது தொடர்பாக பௌத்த விவகாரத் திணைக்களம் ஊடாக சம்பந்தப்பட்ட பீடம் அல்லது பிரிவுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
காவி உடை அகற்றுவது குறித்து பீடங்கள் அல்லது பிரிவுகள் தமது நிலைப்பாட்டை அல்லது நடவடிக்கைகளை 10 நாட்களுக்குள் பௌத்த விவகாரத் திணைக்களம் ஊடாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் கிடைக்கப்பெறாவிட்டால், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உரிய விதிகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்படும் போது, அந்த பிக்குகள் சிறையில் இருந்த காலத்தில் அணிந்திருந்த காவி உடையை தொடர்ந்தும் அணிந்து செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.
எனினும், சம்பந்தப்பட்ட பீடத்தினால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், ஆணையாளர் நாயகத்தின் உரிய உத்தரவுக்கமைய அது நடைமுறைப்படுத்தப்படும்.
பௌத்த பிக்குகளைத் தவிர்த்து, வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் கைதிகளாகச் சிறைப்படுத்தப்படும் பொழுதும் அல்லது விடுதலை செய்யப்படும் பொழுதும் இந்த விதிகளில் தேவையான மாற்றங்களுடன் இந்த உத்தரவுகள் பொருந்தும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri