ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமைக்குள் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் “சிறிய அளவிலான எபிக் ஃபியூரி (Epic Fury) நடவடிக்கையை முன்னெடுக்கலாம்” என வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்த நிலையில், சனிக்கிழமை இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சிறப்பான உடன்படிக்கை
எனினும், மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஈரானுடன் ஒரு சிறப்பான உடன்படிக்கையை எட்டுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் புளோரிடாவில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்பிடம், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “நான் அதை உங்களிடம் கூறுவேன் என்று உண்மையிலேயே நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்த அவர், “ஒருவேளை நாளை தாக்குதல் நடத்தப்படலாம்.
அதேவேளை, ஒரு சிறப்பான உடன்படிக்கையை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
ஈரான் மீது தாக்குதல்
ஈரான் ஓர் உடன்படிக்கையை எட்ட விரும்புவதாகக் கூறிய ட்ரம்ப், அந்த உடன்படிக்கையை ஈரான் தொடர்ந்து கடைப்பிடிக்குமா என்பதே முக்கியமான கேள்வி என்றும் தெரிவித்தார்.
மீண்டும் இராணுவ நடவடிக்கைக்கு எச்சரிக்கை ஈரான் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கிலேயே அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்திலும், ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கக்கூடும் என அவர் எச்சரித்திருந்தார்.
அதேவேளை, அமெரிக்காவின் துருக்கிக்கான தூதர் டொம் பாரக் (Tom Barrack), இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானது.
ஈரானின் பதிலடி
இதற்குப் பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது.
இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகளில் கடும் உயர்வு ஏற்பட்டது. போருக்கு முடிவுகாணும் நோக்கில் ஜூன் 17ஆம் திகதி ட்ரம்ப்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் 14 அம்ச உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாகக் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜூலை 8ஆம் திகதி அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டிய ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.
இதற்கிடையில், ஈரானின் மதகுருமார் ஆட்சியை வீழ்த்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அண்மைய நாட்களில் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.