இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள கடுமையான சட்டம்
போக்குவரத்து குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தற்காலிகமாக உரிமம் இரத்து செய்யப்பட்ட ஓட்டுநர்கள் அடுத்த ஆண்டு முதல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பயிற்சி பாடத்திட்டத்தை முடித்து ஓட்டுநர் இடைநீக்க காலத்தை நிறைவு செய்த ஓட்டுநர்களுக்கு நீதிமன்றங்கள் ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து குற்றங்களை செய்யும் ஓட்டுநர்களுக்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இந்தச் சட்டம் அதிகாரம் பெற்றிருந்தாலும், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
ஓட்டுநர்களுக்கான பயிற்சி
எனினும் தற்போது அதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
செயல்பாட்டுத் திட்டத்தில் அததை சேர்த்து 2026ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
வீதி போக்குவரத்து குற்றங்களை செய்யும் ஓட்டுநர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை மற்றும் பயிற்சிப் பாடத்திட்டம் மூலம் ஒழுக்கமான ஓட்டுநரை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.




