அனோஜனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு
சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(17.11.2026) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திகதி
மேலும் தெரிவிக்கையில், "அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இப்போது வரை அந்த விடயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றது. அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திகதி குறித்துத் தற்போது உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசு என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சும், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்த விடயத்தில் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.