மரண தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்! கைதிக்கு விடுதலை
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
236.3 கிராம் ஹெரோயினுடன் தொடர்புடைய இந்த வழக்கில், பொலிஸாரின் விசாரணையில் ஏற்பட்ட பாரிய குறைபாடுகள் காரணமாக குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை
முன்னதாக, கண்டி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 2021 மே 5ஆம் திகதி நடத்திய சோதனையைத் தொடர்ந்து, வசந்த விஜய குமார யடவார என்ற 'புங்கா' என்பவருக்கு 2024 செப்டம்பர் 9ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

எனினும், சோதனைக்குச் சென்ற பிரதான பொலிஸ் அதிகாரி தனது பொலிஸ் குறிப்புப் புத்தகத்தை எடுத்துச் செல்லவில்லை.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொடர்பான முக்கிய விபரங்கள் உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை. போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட இடத்திலேயே நிறுத்தல் மற்றும் முத்திரையிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
வாக்குமூலங்களில் முரண்பாடுகள்
அத்துடன், கைது மற்றும் சோதனை தொடர்பாக இரண்டு பிரதான பொலிஸ் சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்பட்டன.

எனவே, இந்தக் குறைபாடுகள், வழக்கின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் காரணமாக, பிரதிவாதியின் மேன்முறையீட்டை ஏற்று மரண தண்டனையை இரத்துச் செய்து குற்றஞ்சாட்டப்பட்டவரை, நீதிமன்றம் விடுதலை செய்தது.