காட்டுக்குள் குழந்தை பிரசவித்த சிறுமி – விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நக்கிள்ஸ் வனப்பகுதியில் உள்ள குகையொன்றில் தங்கியிருந்த 15 வயது சிறுமியும், அவரது இரண்டு மாதக் குழந்தையும் தொடர்பான சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மீமுரே பகுதியில் இருந்து காணாமல் போன சிறுமி, ஐந்து மாதங்களின் பின்னர் உடுதும்பர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாமன் மற்றும் மருமகன் உறவுமுறையைக் கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி எட்டாம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 2023ஆம் ஆண்டு முதல், குறித்த இருவராலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், அவரை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் அமைந்திருந்த வனப்பகுதியிலுள்ள குகையொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குகையில் தங்கியிருந்த சிறுமி
மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சிறுமி மீண்டும் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் காதல் தொடர்பான ஒன்றாகப் பேசப்பட்டு வந்தது.
எனினும், பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் இது சிறுமி மீதான துஷ்பிரயோகச் சம்பவம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
குழந்தையின் தந்தை யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், சிறுமி மற்றும் குழந்தை மீட்கப்பட்ட விதம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

கிராமத்திலுள்ள கடையொன்றில் இருந்து 23 வயதுடைய சந்தேகநபர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசியைக் கொள்வனவு செய்து வந்துள்ளார். இதனைக் கவனித்த பொலிஸார் அவர் மீது சந்தேகம் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, வனப்பகுதியிலுள்ள குகையில் தங்கியிருந்த சிறுமியையும் அவரது குழந்தையையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மருத்துவ வசதிகள் இன்றி வனப்பகுதியிலேயே குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தையைப் பராமரிப்பதற்காக அங்கிருந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல், உள ஆரோக்கியம்
வனப்பகுதியில் கிடைத்த மூலிகைகளைப் பயன்படுத்தி தாயையும் குழந்தையையும் பராமரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிறுமியும் குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் விசேட மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

16 வயதுக்குட்பட்ட சிறுமி என்பதால், கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
சிறுமி மற்றும் குழந்தையின் உடல், உள ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.