போராட்டங்களை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா!
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
2027ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கத் தலைவர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தற்செயலாக இடம்பெற்றதா அல்லது திட்டமிட்ட அடிப்படையலான கைதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட இயக்கமொன்று ஆட்சி பீடத்தில் ஏறியதன் பின்னர் போராட்டங்களைக் கண்டு அச்சமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இலகுவானது எனவும் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.