லண்டனில் வசிக்கும் இலங்கை குடும்பத்தை தேடும் மர்ம நபர்கள்
பிரித்தானியா, லண்டனில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரியும் சமூக ஊடகச் செயற்பாட்டாளருமான அஜித் தர்மபாலவின் குண்டசாலையில் அமைந்துள்ள வீட்டிற்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் குறித்த தகவல்களை கோரி வெளிநாடுகளிலிருந்து பதிவிடப்பட்டுள்ள பேஸ்புக் பதிவுகள் தொடர்பிலும் தனியானதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தர்மபால இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்குபவருக்கு 10 மில்லியன் ரூபாய் வரை பணப் பரிசு வழங்கப்படும் என அந்தப் பதிவுகளில் சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் பதிவு
இந்தப் பதிவுகளின் மூலம் தர்மபால குறித்த தகவல்கள் தேடப்படவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் விபரங்கள், அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் முகவரிகள் குறித்த தகவல்களே கோரப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு இடையே நிலவுவதாக கூறப்படும் தொடர்புகள் குறித்து தர்மபால பல தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதற்கு பழிவாங்கும் முகமாக அவரது நெருங்கியவர்களை இலக்கு வைத்து ஒரு தரப்பினர் இந்தப் பதிவுகளை பரப்பியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.