நாட்டில் போதுமான நிதி ஸ்திரத்தன்மை உண்டு! முதலீட்டாளர்கள் அச்சமடையத் தேவையில்லை - பிரதி அமைச்சர் அறிவிப்பு
இலங்கையின் கடன் சுமையை நிர்வகிக்க அரசு முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நிதி ஒழுக்க நடவடிக்கைகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மீளச் செலுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதுமான நிதி ஸ்திரத்தன்மை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை எதிர்நோக்கியுள்ள கடன் சுமைக்குத் தீர்வு காணும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமையக் கடன் பொறுப்புக்களை நிர்வகிக்க அரசிடம் போதுமான நிதி ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது.

உள்நாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசு தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், முறையான நிர்வாகத்தின் காரணமாக எதிர்காலத்தில் கடன் செலுத்துவதில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுக்கும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கும் இடையே எவ்வித எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது.
திருத்தத்தின் நோக்கம்
நிதி ஒழுக்கமே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனையாகும். தனிநபர் தனியுரிமை அல்லது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சொத்து அறிவித்தல் படிவங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.

உத்தியோகபூர்வ விசாரணைகளுக்கு முன்னர் சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரிகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் என்பதால் இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பின் பொதுமக்கள் நேரடியாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் புகார் அளிக்கலாம். எதிர்க்கட்சிகள் இதனை மக்கள் மீது சுமத்தப்பட்ட தண்டனை என விமர்சித்தாலும், ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இது அவசியமான ஒரு மைல்கல்லாகும். இது வெறும் அரசியல் விளையாட்டு அல்ல, மாறாக நீண்டகால பலன்களைத் தரும் முயற்சியாகும் என்றார்.