வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு ஏற்பட்ட நிலை: 2 இலட்சத்திற்கு விற்கப்படும் தங்கநகை..! பதிவாகியுள்ள டொலர் பெறுமதி
இலங்கையில் கடந்த சில வருடங்கள் முதல் இன்றுவரையான காலப்பகுதிக்குள் அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி, சமூக ரீதியாக இருந்தாலும் சரி பல்வேறு மாற்றங்களுக்கு முங்கொடுக்க நேர்ந்துள்ளது.
மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியே இந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியாக காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது.
ரணிலின் பதவியேற்பின் பின்னரான நிலைமை
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு |
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் பல நாட்கள் வீதிகளில் எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே.
எனினும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகளும், அது தொடர்பான வீதி மறியல் போராட்டங்களும் பெருமளவு குறைவடைந்துள்ளதை காணமுடிகிறது. அத்துடன் தற்போது இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமை மூலம் வாகன வரிசைகள் பெரும்பாலும் இல்லாத சூழலே நிலவி வருகிறது.
நாளாந்த எரிபொருள் விநியோகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாமை காரணமாகவே, கியூ ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாக எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவித்திருந்தார்.
என்ற போதும் கூட அந்நிய செலாவணி சர்ச்சை தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து துறையும் தற்போது ஓரளவு உயிர்பெற்றுள்ளது.
டொலர் பிரச்சினையினால் ஆறு நாட்கள் கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல் |
அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்தினால் அத்தியாவசிய பொருட்கள் வழமை போன்று கிடைத்தாலும், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன.
கடந்த காலப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பொருட்களில் விலைகள் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமையும், அதற்கு மக்கள் ஓரளவிற்கு இசைவாக்கமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
மேலோட்டமாக இலங்கை தற்போது ஓரளவு சுமூக நிலைமைக்கு திரும்பியிருக்கின்றதாக கூறப்படுகின்ற போதிலும் கூட இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பேன் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க எப்போதும் தனது உரையில் இலங்கையின் நெருக்கடி நிலைமை மற்றும் தற்போதைய நிலை தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒருபோதுமே அவர் இலங்கை தெளிவாக பொருளாதாரத்திலிருந்து மீண்டு வரும் காலத்தை குறிப்பிடுவதில்லை என்றபோதும் அடுத்த சில மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடி தொடரும் என்ற கருத்தை பதிவிடவும் மறப்பதில்லை.
இலங்கையில் தங்கத்தின் விலை
இதெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கையில் தங்க விலையானது தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக 1800 டொலர்களுக்கு சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
என்ற போதும் கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரப்படி செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகிறது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதுடன்,பின்னர் அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்க விலையில் பாரியதொரு மாற்றம் பதிவாகியுள்ள சூழ்நிலையில் இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு. இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கறுப்பு சந்தையில் டொலர்
அதேபோன்று அமெரிக்க டொலர் பெறுமதியானது இலங்கையில் மத்திய வங்கியின் அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் அண்ணளவாக 360 ரூபா அளவில் பாரியதொரு மாற்றமின்றி பதிவாகி வரும் சூழ்நிலையில் கறுப்பு சந்தை தகவல் படி 400 ரூபாவை அண்மித்த பெறுமதியில் டொலர் விற்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியிருப்பினும் நாட்டில் தற்போது நிலவி வரும் சுமூக நிலை போன்றதான சூழல் நாடு விரைவில் வழமைக்கு திரும்பிவிடும் என்பதை காட்டுகிறதா இல்லையெனில் இதுவொரு மாய தோற்றமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் நேர்ந்த நிலை! இழக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள் |