மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் ஆயர் தலைமையில் புத்தாண்டு திருப்பலி (Photos)
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நேற்று (31.12.2022) இரவு 11.45 மணிக்கு மக்கள் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டிருந்த போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
புதிய சிந்தனைகள்
இந்த புதிய ஆண்டிலே நீங்கள் எத்தனையோ சிந்தனைகளோடு புது திட்டங்களோடு அடியெடுத்துள்ளீர்கள். சென்ற வருடம் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுபட்டு, எமது நாட்டிலே பொருளாதார நிலை மாறி மக்கள் ஒரு நெருக்கடியான நிலையில் வாழாமல் விடுதலை பெற்று ஒரு சாதாரண ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன்.
அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெரிய நெருக்கடிகள் இருந்து வந்தது. புத்தாண்டிலே உங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கப்பெற்று நீங்கள் சுபிட்சமாக வாழவும் இறை ஆசீர் நிரம்ப கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்திட இறைவன் உங்களுக்கு அருள வேண்டும்.
சிறந்த ஆண்டாக அமையட்டும்
இந்த ஆண்டிலேயே நீங்கள் விடுதலை பெற்ற மக்களாக ஒரு சுதந்திரத்தை கொண்டாடக் கூடும் மக்களாக வாழ இறைவன் உங்களுக்கு அருள வேண்டும். இலங்கை நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் இவ்வருடம் நிறைவு பெறும்.
ஆனால் மக்களுக்கு எப்படியான சுதந்திரம் இருந்தது என்று உங்களுக்கு தெரியும். ஆகையினால் அனைத்து மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கப்பெற்று அவர்கள் சுதந்திரத்துடன் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு இலங்கை நாடு ஒரு முன்னேற்றத்தை நோக்கி செல்ல இறைவன் எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து, மக்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டை தர வேண்டும் என்று நான் ஆசீக்கின்றேன்.
சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
யாழ். ஆயரின் வாழ்த்து செய்தி
யாழ். ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் புதுவருட வாழ்த்து செய்தி
2023 புதிய ஆண்டு மலருகின்ற வேளை புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நீங்கள் உலகின் எந்தப்பாகத்தில் இருந்தாலும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள் ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர்வாதம் மிக்க ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.
இறைவனின் அன்னையும், இறைமக்களின் அன்னையுமான தேவ அன்னை தாய்க்குரிய
அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் எத்தீங்குமின்றி
பாதுகாத்து வழிநடத்தி எம் அனைத்துத் தேவைகளிலும் உடனிருந்து நிறைவு செய்ய
ஆசீர்வாதம் மிக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.